×

வத்தலக்குண்டு நகர மக்களின் பல்லாண்டுகால கோரிக்கை ஏற்பு ரூ.1.50 கோடியில் எரிவாயு தகன மேடை பணிகள்

*பொதுமக்கள் வரவேற்பு

*தமிழ்நாடு அரசுக்கு நன்றி

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டுவில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் ரூ1.50 கோடியில் துவங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளாட்சித்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.வத்தலக்குண்டு சிறப்புநிலை பேரூராட்சியில் 7 ஆயிரம் வீடுகள் உள்ளன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வஉசி ஆகியோருடன் சுதந்திரத்திற்காக போராடிய சிவம் பேசினால் சவமும் எழும் என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த வத்தலக்குண்டு நகரம், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்பதுபோல மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, கொடைக்கானல் போன்ற முக்கிய நகரங்களில் மையத்தில் அமைந்துள்ள வத்தலக்குண்டுவின் முக்கிய தொழில் விவசாயமாகும்.

இத்தனை புகழ் பெற்ற வத்தலக்குண்டுவில் இரண்டு மயானங்கள் உள்ளன. கணவாய்பட்டி சாலையில் உள்ள மயானத்தில் போதிய வசதி இல்லாததால், பெரும்பாலானோர் ஊருக்கு வெளியே ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில், மாப்பிள்ளையான் தோப்பு என்ற இடத்திலுள்ள மயானத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்து வந்தனர். மஞ்சளாறு அருகில் ஓடுவதால் தண்ணீர் வசதி இருந்தது. அதேநேரம் நீண்டதூரம் என்பதால் முதியோர்கள் நேரில் வந்து இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு நகர மக்களுக்கு வசதியாக மின்மயானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பான கோரிக்கையை வத்தலக்குண்டுவில் பிறந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் பொதுமக்கள் கொண்டு சென்றனர். அவரும் பேரூராட்சியில் திமுக வெற்றிபெற்ற பிறகு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி தலைவர் சிதம்பரம். தலைமையிலான தி.மு.க கூட்டணி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளிலும் வெற்றிபெற்று எதிர்கட்சிகளை ஒயிட்வாஷ் செய்தது. அதன் பிறகு பேரூராட்சியினர் வத்தலக்குண்டுவை தூய்மை நகரமாக்கி முழுமையான பசுமை நகரமாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர் கேபி.முருகன், நகரச் செயலாளர் சின்னத்துரை ஆகியோர் ஆலோசனையோடு, வத்தலக்குண்டு நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையான எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்குரிய திட்ட அறிக்கை தயாரித்து பேரூராட்சி மன்றத்தில் 0நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, நிலக்கோட்டையில் மின்மயானம் அமைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் வத்தலக்குண்டுவிற்கு இதற்கான அனுமதி கிடைக்காது என்றும், தொகுதிக்கு ஒரு மின்மயானம் மட்டுமே அமைக்க முடியும் என்றும் கூறினர்.ஆனால் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு வத்தலக்குண்டு பேரூராட்சி திட்ட அறிக்கையை ஏற்று மின் மயானம் அமைக்க ரூ.1 கோடியே 49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு பேரூராட்சி பைபாஸ் சாலையில் வனதுர்கையம்மன் என்ற காளி கோயில் அருகில் கணவாய்ப்பட்டி செல்லும் சாலையையொட்டி எரிவாயு தகனமேடை அமைக்க ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம் வருவாய்த்துறை உதவியோடு கையகப்படுத்தினர். பின்னர் இங்கு மின் மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது.

நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர். வத்தலகுண்டு பேரூராட்சியினர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை அமைத்து பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். எரிவாயு தகன மேடை அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு கட்டிடம் கட்டுவதற்காக செங்கல், மணல், ஜல்லி ஆகியவை குவிக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்டோர் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். பணிகளை வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத்தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கூறுகையில், ‘‘எரிவாயு தகனமேடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும், பழநி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைப்பார்’’ என்றார். நீண்ட கால கோரிக்கையான எரிவாயு தகன மேடை அமைத்து வரும் வத்தலக்குண்டு பேரூராட்சியினரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் குமரேசன் கூறுகையில், ‘‘வத்தலக்குண்டு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்கு எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்பது எனது தாத்தா கால கோரிக்கையாகும். அது தற்போது திமுக ஆட்சியில் நிறைவேறி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வத்தலக்குண்டு மக்கள் மட்டுமின்றி இந்நகரை அடுத்துள்ள சேவகம்பட்டி பேரூராட்சி, பட்டிவீரன்பட்டி பேரூராட்சி பொதுமக்களும் இதில் பயனடைவார்கள். இந்த திட்டப்பணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், வத்தலகுண்டு பேரூராட்சியினருக்கும் பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

The post வத்தலக்குண்டு நகர மக்களின் பல்லாண்டுகால கோரிக்கை ஏற்பு ரூ.1.50 கோடியில் எரிவாயு தகன மேடை பணிகள் appeared first on Dinakaran.

Tags : Vathalakundu ,Government of Tamil Nadu ,Wattalakundu ,Vatalakundu ,
× RELATED வத்தலக்குண்டு அருகே கதிகலக்கியது இரட்டை மாட்டுவண்டி பந்தயம்